search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துஷிதா படேல்"

    பாலியல் புகாருக்கு ஆளான மத்திய இணை மந்திரி எம்ஜே அக்பர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். #MeToo #MJAkbar #PriyaRamani
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருப்பவர் எம்.ஜே.அக்பர்.

    இவர் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

    எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டு கூறினார். “மீடூ” இயக்கத்தின் மூலம் அவர் எம்.ஜே.அக்பர் குறித்து பரபரப்பான பல தகவல்களை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் 2 பெண் பத்திரிகையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார்கள் கூறினார்கள்.

    இதனால் மத்திய மந்திரி பதவியில் இருந்து அக்பர் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. எனவே அக்பரை பதவியில் இருந்து விலக்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே நைஜீரியாவில் இருந்து டெல்லி திரும்பிய எம்.ஜே.அக்பர், தன் மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறி பெண் பத்திரிகையாளர் பிரியாரமணி மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார். அதன் படி பிரியாரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுமார் 20 பெண் பத்திரிகையாளர்கள் பிரியாரமணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அக்பர் தொடுத்துள்ள வழக்கை எதிர்கொள்ள தயார் என்று பிரியாரமணியும் 20 பெண் பத்திரிகையாளர்களும் கூறியுள்ளனர்.



    இந்த நிலையில் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு பாலியல் புகாரை தெரிவித்துள்ளார். அவரது பெயர் துஷிதா படேல். இவர் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில் கூறி இருப்பதாவது:-

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் இரண்டு தடவை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பத்திரிகை பணி தொடர்பாக என்னை அவர் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வருமாறு அழைத்தார். நான் அங்கு சென்று அவரை சந்தித்தேன்.

    அவரது அறைக்குள் சென்ற பிறகுதான் அவர் தவறான கண்ணோட்டத்துடன் என்னைப் பார்த்ததை புரிந்து கொண்டேன். அவர் என்னை கட்டாயப்படுத்தி கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.

    அவரது உண்மையான முகம் இப்போதுதான் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது. எனவேதான் நானும் எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை வெளியிட்டுள்ளேன்.

    இவ்வாறு பெண் பத்திரிகையாளர் துஷிதா படேல் கூறியுள்ளார். அக்பர் மீது பெண்கள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறி வருவது மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே அக்பர் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களை தீவிரப்படுத்த பெண் பத்திரிகையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், மேனகாகாந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #MeToo #MJAkbar #PriyaRamani
    ×